×

மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் சேர இன்றும், நாளையும் போட்டித்தேர்வு

தஞ்சாவூர், மே 10: தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதியில் சேர தேர்வு போட்டி வருகிற இன்றும், நாளையும் ஆகிய 2 நாட்கள் நடக்க உள்ளதால் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் கலெக்டர் தீபக் ஜேக்கப் விடுத்துள்ள செய்க்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் சாதனை புரிவதற்கேற்ப விளையாட்டுப் பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 2024ம் ஆண்டிற்கான பள்ளி மாணவ, மாணவிகள் 7,8,9 மற்றும் 11ம் வகுப்புகளில் சேர்வதற்கான மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகிற இன்று மாணவர்களுக்கும், நாளை மாணவிகளுக்கும் தஞ்சையில் உள்ள அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் சேர மாணவர்கள் ஆன்லைன் மூலம் www.sdat.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்களுக்கு தேர்வுப் போட்டிகள் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கையுந்துபந்து, ஆக்கி, கபடி, கைப்பந்து, கிரிக்கெட் மற்றும் நீச்சல் ஆகிய விளையாட்டுகளுக்கும், மாணவிகளுக்கு தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, ஆக்கி, கபடி மற்றும் கையுந்துபந்து ஆகிய விளையாட்டுகளுக்கும் நடத்தப்படுகிறது. மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில அளவிலான தேர்வுப் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். சிறப்புநிலை விளையாட்டு விடுதியில் கல்லூரி மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் அடுத்த மாதம் ஜூன் 6ம் தேதி சென்னையில் நடக்கிறது. முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் 6,7 மற்றும் 8ம் வகுப்பில் பள்ளி மாணவர்கள், மாணவிகள் சேர்வதற்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் 7ம் தேதி சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மேலகொட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்திலும் நடைபெறுகிறது.

விளையாட்டு விடுதி மாநில அளவிலான நேரடி தேர்வு பள்ளி மாணவர்களுக்கு வருகிற 13ம் தேதியும், மாணவிகளுக்கு 14ம் தேதியும் சென்னை, விழுப்புரம், கடலூர், திருச்சி ஆகிய இடங்களில் நடக்கிறது. சிறப்புநிலை விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 5ம் தேதியாகும். முதன்மை நிலை விளையாட்டு மையத்திற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 6ம் தேதியாகும். விளையாட்டு விடுதிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 8ம் தேதி. குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பூர்த்தி செய்ய இயலாது. ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். மற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும். மேலும் தகவல்களுக்கு தொடர்பு மையம் 9514000777 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் சேர இன்றும், நாளையும் போட்டித்தேர்வு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Collector ,Deepak Jacob ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் விடியல் பயணம்...